குழந்தைகள் தினத்தன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்படி, ரூ. 7.34 கோடி மதிப்புள்ள 62 லட்சம் கேக்குகளை தயார் செய்ய பிரிட்டானியா உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்காக 45 கிராம் எடையுள்ள ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் கொள்முதல் செய்ய அரசு டெண்டர் கோரியது.
இந்த டெண்டர் தற்போது இறுதி செய்யப்பட்டு பிரிட்டானியா உள்ளிட்ட 4 முக்கிய நிறுவனங்களுக்கு மொத்தம் 62. 46 லட்சம் கேக்குகள் சப்ளை செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்படும் ’ட்ரீம் பேக்’ நிறுவனம் சேலம், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, தருமபுரி, தேனி, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் செயல்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் சப்ளை செய்யவுள்ளது.
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டானியா நிறுவனத்துக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிறுவனம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேக் வழங்கவுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த எலைட் நேச்சுரல் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கேக், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
ஐடிசி நிறுவனத்தின் சன்பீஸ்ட் நிறுவனம், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. டெண்டர் வழங்கப்பட்டுள்ள நான்கு நிறுவனங்களும் நவம்பர் 11-ம் தேதிக்குள் உற்பத்தியை முடித்து, அந்தந்த மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு ஆர்டர்?
நிறுவனம் – கேக் எண்ணிக்கை – மதிப்பு
’ட்ரீம் கேக்’ நிறுவனம் – 33.87 லட்சம் – ரூ.3.84 கோடி
பிரிட்டானியா – 10.03 லட்சம் – ரூ.1.28 கோடி
எலைட் நேட்சுரல் – 10.06 லட்சம் – ரூ.1.14 கோடி
சன் பீஸ்ட் – 8.48 லட்சம் – ரூ. 1.07 கோடி